Saturday, 9 September 2017

வாழ்வே மாயம்!

வாழ்வே மாயம்!

விதி அல்லது தலையெழுத்து என்பர்; இதை, மாற்றவே முடியாதாம். அதுவும் மிக மிக ரகசியமானதாம். தலையெழுத்து தனி ரகமான எழுத்தாம்; அதை, பிரம்மாதான் எழுதுகிறாராம். ஆனால், அவரால் கூட, என்ன எழுதினோம் என்று படிக்க முடியாதாம்.

சில மாணவர்கள் எழுதியிருப்பதை பார்த்து ஆசிரியர், "ஏண்டா... தலையெழுத்து மாதிரி எழுதியிருக்கியே... இதை எப்படி படிக்க முடியும்?' என்று கோபிப்பதும் உண்டு.
ஆக, தலையெழுத்து மிகவும் ரகசியமானது. கை ரேகை நிபுணர், கால் ரேகை நிபுணர் என்றெல்லாம் இருக்கின்றனர்; தலை எழுத்து நிபுணர் என்று யாரும் இருப்பதாக தெரியவில்லை.

ஒரு குருவும், சீடனும் இருந்தனர். சீடன்மேல் ரொம்ப பிரியம் குருவுக்கு. ஒரு நாள், குருவை பார்த்து,

"உங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே... எனக்கு எப்போது மரணம் என்று, உங்கள் சக்தியால் தெரிந்து சொல்லுங்கள்...' என்றான் சீடன்.

"தலையெழுத்தை பற்றி என்னால் சொல்ல முடியாது. ஒன்று செய்யலாம், நாம் இருவரும் போய், எமதர்மனிடம் கேட்போம். அவர் என்ன சொல்கிறாரோ பார்க்கலாம்...' என்றார் குரு. எமனிடம் போய் நின்றனர் இருவரும்...

"என் சீடனுக்கு, எப்போது மரணம்?' என்று கேட்டார் குரு. அதற்கு எமன், "இதை என்னால் சொல்ல முடியாது. தர்ம ராஜன் யாருடைய உயிரை, எப்போது கொண்டு வரச் சொல்கிறாரோ, அப்போது, அந்த உயிரை நான் கொண்டு வருவேன். அதனால், நீங்கள் தர்மராஜனிடம் போய் கேளுங்கள்...' என்றான். இருவரும், தர்மராஜனிடம் சென்றனர்...

"என் சீடனுக்கு எப்போது மரணம்?' என்று கேட்டார் குரு.

தர்மராஜன், "அது எனக்குத் தெரியாது. அதோ, அந்த அறையில் போய் நின்றால், மேலேயிருந்து ஒரு சீட்டு விழும். அந்த சீட்டில் யார் பெயர் இருக்கிறதோ, அவர்களது உயிரைக் கொண்டு வரும்படி, எமனுக்கு உத்தரவிடுவேன். "இன்று என்ன சீட்டு விழுகிறது என்று பார்க்கலாம், வாருங்கள்...' என்று சொல்லி, குரு, சீடன் இருவருடன் அந்த அறைக்கு சென்றார் தர்மராஜன்.

அப்போது, மேலேயிருந்து ஒரு சீட்டு வந்து விழுந்தது. அதை எடுத்து படித்துவிட்டு, எமனிடம் கொடுத்தான் தர்மராஜன். எமன் அதைப் படித்துப் பார்த்தான்... "குருவும், சீடனும் சேர்ந்து எப்போது தர்மராஜனிடம் வருகின்றனரோ, அப்போது இருவருக்கும் மரணம்...' என்று அதில் எழுதியிருந்தது. உடனே, தன் வேலையைச் செய்தான் எமன். குருவும், சீடனும் கீழே விழுந்து இறந்து போயினர்.

அதாவது, தலையெழுத்து, விதி என்பதெல்லாம் ரொம்பவும் ரகசியமானது. அதைத் தெரிந்து கொள்வது கடினம்; வீணாக முயற்சி செய்ய கூடாது என்பார்கள்.

நோயாளிக்கு மருந்து கொடுத்து, "இந்த மருந்தையும் சாப்பிடுங்கள்; கூடவே, "நாராயணா... நாராயணா' என்றும் சொல்லிக் கொண்டிருங்கள்...' என்றார் வைத்தியர்.

"ஏன்?' என்று கேட்டார் நோயாளி.

"மருந்து சாப்பிட்டு, வியாதி குணமாகாவிட்டாலும், நாராயண நாமம் சொன்ன புண்ணியத்தால், வைகுண்ட வாசமாவது கிடைக்குமே...' என்றார் வைத்தியர்.

அதுபோல், தலையெழுத்தை எந்த வைத்தியரும் மாற்ற முடியாது; மரணத்தை வென்றவர்களும் கிடையாது. ஜனனம் ஒருவழி,... மரணம் பலவழி!

No comments:

Post a Comment