Wednesday, 6 September 2017

திருமண தடை நீக்கும் நந்தீஸ்வரர்...


திருமண தடை நீக்கும் நந்தீஸ்வரர்

நாம் வடதிருமுல்லை வாயிலில் உள்ள ஜீவசமாதிகளை, சித்தர் பீடங்களை இன்றிலிருந்து  பார்க்க  போகிறோம்.

அன்னை நீலம்மையார் மற்றும்  மாசிலாமணி சித்தர்  ஆகிய 2 மிகப்பெரிய  ஞானிகளின் அருள்  சுரக்கும், ஆற்றல்மிக்க  ஞானாலயம்  இந்த திருமுல்லை  வாயிலில் இருக்கிறது.

அதோடு மட்டும் அல்லாது திருவொற்றியூர்  போன்றே இத்திருமுல்லை  வாயில்  கோவிலிலும் பல ஞானிகள்  ஜீவசமாதி மற்றும் சூக்ஷூம சமாதி அடைந்துள்ளனர்.

அவற்றை நாம் பார்ப்பதற்கு முன் திருமுல்லை  வாயில் கோவிலின்  தல வரலாறை பார்ப்போம்.

திருமுல்லைவாயில்   பெயர் காரணம்.

திருமுல்லைவாயில் என்னும்  பெயரில் இரண்டு  ஸ்தலங்கள் இந்தியாவில்  உண்டு. ஒன்று  பூம்புகார் நகர் அருகே  உள்ள தென்திருமுல்லைவாயில். இன்னொன்று  சென்னையில்  அம்பத்தூர்  அருகே  உள்ள வடதிருமுல்லை  வாயில்.

வடதிருமுல்லை வாயில், தென்திருமுல்லைவாயில் இரண்டு  ஸ்தலங்களிலுமே முல்லை மலர்  தான் ஸ்தலமரம்.

இந்த கோவில்  ஈசனுக்கு  மாசில்லாமணி என்பது  பெயர்.

பெயருக்கான காரணம்.

இதற்கு முன் இந்த பகுதியை   ஓணன், காந்தன்  என்னும் இரு அசுரர்கள்  ஆட்சி செய்தனர். அந்த இருவரும்  மகா முரடர்கள்.  அதே சமயம்  தீயவர்களிடமும்  எதாவது ஒரு நல்ல  விஷயம் இருக்கும்  அல்லவா. அந்த அசுரர்கள்  தீவிர  பைரவ   உபாஸகர்கள். இந்த அசுரர்கள்  காஞ்சியில்  கட்டிய  கோவில் தான்  இன்று ஓணகாந்தன்  தளி என்று  அழைக்கப்படுகிறது.

வன்முறையால் மற்றவர்கள் பொருளைக் கொள்ளையடித்துக்கொண்டு, பெரிய அரண்களைக் கட்டிக்கொண்டு, பொருளை இழந்தவர்கள் தாக்கும் போது இந்த அரண்களில் பதுங்கிக் கொண்டு கொடுமைகள் செய்துவந்தனர். தொண்டை நாட்டைச்சேர்ந்த புழல் கோட்டத்தினுள் நுழைந்து அடிக்கடி மக்களுக்குத் துன்பம் விளைத்தும் வந்தனர் இந்த அசுர சகோதரர்கள்.
ஒருநாள்.

தொண்டைமான் மன்னர்  தனது  பரிவாரங்களோடு  வேட்டையாட புறப்பட்டார்.

அந்த அசுரர்களின்  ஆளுகைக்கு  உட்பட்ட  பகுதியில்  தான் அவர் துஷ்ட மிருகங்களை வேட்டையாடி கொண்டிருந்தார்.

அப்பபொழுது  இரவிலே அவருக்கு  மணியோசை கேட்டது. இயல்பிலேயே பக்திமானான தொண்டைமான் பக்கத்தில் ஏதோ ஆலயம் இருக்க வேண்டும் நாளை அந்தக் கோவிலிலே சென்று இறைவனை தரிசிப்போம் என்று தீர்மானித்துக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தார்.

மறு நாள் காலை படைகள் இல்லாமல் தனியாக பட்டத்து யானை மீது ஏறி கோவிலைத் தேடி புறப்பட்டார்.

அவர்  தனியாக வருவதை அறிந்த ஓணன், காந்தன் இருவரும் தனது படையை அவர் மீது ஏவி விட.  படை பலம் இல்லாமல் தனியாக அவர்களிடம் சிக்கிக் கொண்டால் ஆபத்து என்பதை உணர்ந்த மன்னன் தனது படையை திரட்டி கொண்டு வர பின்வாங்கினார்.

அப்போது முல்லைக் கொடிகள் அடர்ந்திருந்த ஒரு பகுதியில் யானையின் கால்களை கொடிகள் சுற்றிக் கொண்டன. உடனே யானை மீது அமர்ந்தபடியே தனது நீண்ட வாளினால் அந்த முல்லைக் கொடிகளை வெட்டித் தள்ள ஆரம்பித்தார்.

அவ்வாறு அவர்  வெட்டிய போது அவரின் வாளில் இருந்து ரத்தம் சொட்டியது.

அதிர்ச்சி அடைந்த மன்னர் தொண்டைமான்.

உடனே கீழே குதித்து முல்லைக் கொடிகளை கைகளால் விலக்கிப் பார்த்தார். அவர்  கண்ட காட்சி அவரை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அங்கே எம்பெருமான் நீலகண்டர், உமாபதி, ஜடதாரர் , கங்காதீஸ்வரர், சிவலிங்க திருமேனியாய் எழுந்தருளியிருப்பதையும் வாள் பட்டு அவர் பாணத்திலிருந்து ரத்தம் பெருகுவதையும் கண்டார் தொண்டைமான்.

தீவிர சிவபக்தரான தொண்டைமான் அதனால்  மனம் ஒடிந்து  அதே வாளால் தனது தலையை துண்டிக்க நினைத்த  பொழுது. சிவன் தொண்டைமானை தடுத்தார்.  

தொண்டைமானே கலங்க வேண்டாம் உன் மூலமாக நான் வெளிப்பட  ஆடிய திருவிளையாடல் இது. உனக்கு மணியோசையை உணர்த்தியது நான் தான்.
அஞ்சாதே உன் வாளால் வெட்டுப்பட்டாலும் நான் மாசு இல்லாத மணியே என்றார்.

இவ்வாறு தான் இந்த ஸ்தலத்து  ஈசனுக்கு மாசில்லாமணி என்று பெயர் வந்தது.

ஈசன் தாமே தமக்கு சூட்டி  கொண்ட  பெயர் மாசில்லாமணி.

அசுரர்களோடு தொண்டைமான் போர் புரிய  நந்தி தேவரை  சிவன்  அனுப்பி வைத்தார்.

நந்தி தேவர் உதவியோடு ஓணன், காந்தன் படையை வெற்றி  கொண்ட  தொண்டமான்  சக்கரவர்த்தி அந்த அசுரர்கள்  அரண்மனையில் இருந்த  இரு எருக்கம் துண்களை ஜயஸ்தம்பமாக கொணர்ந்து மாசிலாமணிஸ்வருக்கு திருக்கோவில்  அமைத்த போது அர்த்த மண்டபத்தில் அவற்றை  பொருத்தினார்.

இன்றும் இந்த தூண்களை நாம்  காணலாம்.

அந்த அசுரர்கள் வழிபட்ட பைரவ மூர்த்தியையும் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்தார் தொண்டைமான்.

தொண்டைமான் சக்கரவர்த்தி காலம். ஏறத்தாழ  மூவாயிரம்  ஆண்டுகளுக்கு  முன்.

தொண்டைமாணுக்கு உதவச் சென்ற நந்தி இறைவனைப் பார்க்காமல் எதிரே கோவில் கோபுரத்தை நோக்கி அமைந்துள்ளது இக்கோவிலின் ஒரு தனி சிறப்பு.

இங்குள்ள நந்தீஸ்வரரை  வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட அணைத்து  காரியங்களும் வெற்றி அடையும்.

இங்குள்ள நந்தீஸ்வரர் இடர்களை  நீக்குபவர்.

நமது

தொல்லைகளை போக்கும்  முல்லைவனநாதர்

இந்த தலத்து ஈசன்.

குறிப்பாக இத்துருமுல்லைவாயில் நந்தி

திருமண தடையை  நீக்குபவர்.

தன் வாளால் வெட்டுப்பட்டதால் இறைவனின் திருமேனி எரியுமே என்ற கவலையினால் நல்ல மணம் கமழும் சந்தனத்தை அரைத்து இறைவன் திருமேனியெங்கும் காப்பிட்டார்  தொண்டைமான்.

எனவே இன்றும் வருடம் முழுவதும் சந்தனக் காப்புடனே தரிசனம் தருகின்றார் மாசில்லாமணிஸ்வரர்.

ஒவ்வொரு வருடமும் இறைவன் தானே வெளிப்பட்ட அந்த சித்திரை சதய நாளன்று அவருக்கு புது சந்தன காப்பிடப்படுகின்றது.
எனவே அதற்கு இரு நாள் முன் பழைய சந்தனக் காப்பு நீக்கப்படுகின்றது.

சித்திரை சதய நாளன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்று மீண்டும் மூலவருக்கு புதிதாக சந்தனம் அரைத்து சாத்துகின்றனர். அன்று இத்திருக்கோவிலில்  சந்தனம் அரைத்து பேறு பெறுவோர் அநேகர்.

No comments:

Post a Comment